மகாத்மா
காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன் |
| |
பாகம்: 9 |
|
|
1939ல் ராஸ்கோட்டில் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே பூசல் மூண்டது. மன்னர் வாக்கு மீறி நடந்ததைக் கண்டித்துக் காந்தி ராஜ்கோட்டில் மார்ச் 3உ "சாகும் வரை" உபவாசம் மேற்கொண்டார். வைஸ்ராய் தலையீட்டின் பேரில் மத்தியஸ்தப் பைசலுக்கு மன்னர் இணங்கவே, உண்ணாவிரதத்தைக் காந்தி நிறுத்தினார். பின்னர் வைஸ்ராய் லின்லித்கோவைச் சந்திப்பதற்காக அவர் டில்லிக்குச் சென்றார்.
அக்காலங்களிலெல்லாம் காரியதரிசி மகாதேவ் தேசாய், காந்திக்குப் பேருதவி புரிந்துவந்தார். முதலாவது ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு முன் அவர் காந்தியின் சீடராகச் சேர்ந்தவர். அறிவும், திறமையும், நாணயமும், நம்பிக்கையும் நிறைந்த காரியதரிசியாக விளங்கினார். |
|
1939 செப்டம்பரில் இரண்டாவது உலக மகா புத்தம் மூண்டது. காந்தியையும் ஜின்னாவையும் வைஸ்ராய் அழைத்துப் பேசினார். பிரிட்டனிடம் காந்திக்கு அனுதாபம் இருந்த போதிலும் இந்தியாவை நிர்ப்பந்தமாக யுத்தத்தில் மாட்டுவதை எதிர்த்தார். அதைத் தொடர்ந்து வர்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் அஹிம்சைக்கு இடம் இல்லை என்று கமிட்டி தீர்மானித்ததைக் காந்தி ஏற்கவில்லை. இவ்விதம் முதல் முதலாகக் காங்கிரஸும் காந்தியும் தனித்தனிப் பாதையில் செல்ல நேர்ந்தது. |
|
மறுபடியும் வைஸ்ராய் அழைத்ததன் பேரில் ஸிம்லாவிற்குக் காந்தி சென்றார். யுத்தத்தில் இந்தியாவின் நிலைமை பற்றி அவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். ரிக்ஷாவில் செல்வதைக் காந்தி கட்டோடு வெறுத்தபோதிலும் வைஸ்ராய் மாளிகைக்குச் செல்ல, தள்ளாமை காரணமாக, ஒரு ரிக்ஷாவை உபயோகிக்க நேர்ந்தது.
முக்கியமான அரசியல் பிரச்னைகளில் மூழ்கியிருந்த காலங்களில்கூட ஹரிஜன நிதி சேகரிக்கக் காந்தி மறந்தது கிடையாது. |
|
பிப்ரவரியில் காந்தியும் கஸ்தூரிபாவும் சாந்திநிகேதனில் இருதினங்கள் தங்கினர். அப்போது வயோதிக டாகூரின் உடல் நிலை நலிய ஆரம்பித்திருந்தது. மாந்தோப்பு ஒன்றில் காந்தி தம்பதிகளுக்கு அவர் வரவேற்பு உபசாரம் அளித்தார். விசுவபாரதியைக் காந்தி பராமரிக்க வேண்டுமென்று டாகூர் அப்போது கேட்டுக் கொண்டார். சாந்திநிகேதனின் கலையழகில் காந்திக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. அந்நிலையத்துக் கலைஞரான நந்த லால் போஸ், பைஸ்பூரிலும், ஹரிபுராவிலும் காங்கிரஸ் நகரங்களை நிர்மாணித்து உதவியவர். |
|
சாந்திநிகேதனிலிருந்து திரும்பும் வழியில் கல்கத்தாவில் நோய்வாய்ப்பட்டிருந்த தீனபந்து ஆண்ட்ரூஸைக் காந்தி பார்த்தார். காந்தியின் அருமந்த ஆங்கிலேய நண்பர்களுள் ஒருவர் அவர்.
1940 அக்டோபரில் தனி நபர் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்கக் காந்தி தீர்மானித்தார். நிர்மாண வேலைகளிலேயே அனவரதமும் ஈடுபட்டிருந்த வினோபா பாவே முதலாவது சத்தியாக்கிரகியாகக் காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுத்தத்தை ஆட்சேபித்துப் பேசிய வினோபா கைது செய்யப்பட்டார். இன்னும் ஏராளமான சத்தியாக்கிரகிகளும் இவ்வாறே சிறை புகுந்தனர். |
|
அந்த இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் அலகாபாத்தில் கமலா நேரு ஆஸ்பத்திரிக்குக் காந்தி கால்கோள் விழா நடத்தினார். |
|
மகாயுத்தத்தில் ஜப்பான் 1941 டிசம்பரில் நேர்ந்தது. அடுத்த மாதம் காரியக் கமிட்டி வர்தாவில் கூடி ஆலோசித்தது. யுத்தம் சம்பந்தமாகக் காங்கிரஸின் கொள்கையை நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பரப்ப வேண்டும் என்றும் எத்தகைய கஷ்டத்தையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் காந்தி கூறினார். மார்ச் மாதத்தில் பர்மா மீது ஜப்பான் படையெடுத்தது; இந்தியாவிற்கும் அபாயம் வரும்போல் இருந்தது. பிரிட்டிஷ் சர்க்காரின் தூதராக வந்த ஸர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் இந்தியாவிற்கு அதிகாரம் எதையும் வழங்காமல் காங்கிரஸின் ஒத்துழைப்பை மட்டும் நாடினார். அவரது திட்டத்தைப் "பின் தேதியிட்ட செக்" என்று காந்தி வர்ணித்தார். |
|
|
|
| |
Website
Designed by Gandhi Iyakkam, Thanjavur |
|