மகாத்மா
காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன் |
| |
பாகம்: 2 |
|
|
குடும்ப ரட்சணையைக் கவனித்துக் கொண்டு மோஹன் தாஸுக்கு வேண்டிய உதவிகளையும் அளிப்பதற்கு அண்ணா லக்ஷ்மிதாஸ் தாமாகவே முன்வந்தார். தம்பியிடம் அவருக்கு மிகுந்த வாஞ்சை. |
|
1888 செப்டம்பர் 4 ஆம் தேதி மோஹன் தாஸ் கப்பல் ஏறி அக்டோபரில் லண்டன் போய்ச் சேர்ந்தார். அங்கு நவநாகரிகப் பிரமுகர்களோடு கலந்து பழுகுவதற்கு அவசியமான டாம்பீக அலங்காரங்களோ தைரியமோ அவரிடம் இல்லை. இக் குறையை நீக்குவதற்காக அவர் விலையுயர்ந்த உடைகளை வாங்கினார்; பிடில் வாசிக்கவும், நடனமாடவும், மேடைப் பிரசங்கம் செய்யவும் அவர், வெள்ளைக்காரர்களைப் போல, பயிற்சி பெற ஆரம்பித்தார். ஆனால் அந்த மோகம் எல்லாம் மூன்று மாதத்தில் மறைந்துவிட்டது. சைவஉணவுக்காரரான மோஹன் தாஸ், லண்டன் சைவ உணவுச் சங்கத்தில் சேர்ந்து நிர்வாகக்குழு உறுப்பினராகத் தெர்த்தெடுக்கப்பட்டார். 'வெஜிடேரியன்' என்ற சங்சிகையில் அவர் கட்டுரைகளும் எழுதி வந்தார். தமது பேட்டையில் சைவ உணவு 'கிளப்' ஒன்றையும் ஆரம்பித்தார். |
|
1891 ஜூன் 10 ஆம் தேதி மோஹன் தாஸ் ஒரு பாரிஸ்டர் ஆனார். ஜூன் 12 ஆம் தேதி கப்பலில் புறப்பட்டு ஜூலையில் பம்பாய் திரும்பினார். இந்தியாவில் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார்; ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் தங்கள் சட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்கும்படி அப்துலலா கம்பெனியார் 1893 ஏப்பல் மாதத்தில் அவரைக் கேட்டுக் கொண்டனர். காந்தி தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று டர்பான் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். அங்கு 'கூலிகள்' என்று வெள்ளையர்களால் இழிவுபடுத்தப்பட்ட இந்தியர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டி அவர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டுவதற்கு அவர் பாடுபட்டார். வழக்கை முற்றவிடுவதற்குப் பதில் வாதி, பிரதிவாதிகளுக்கிடையே சமரஸம் ஏற்படுத்துவதில்தான் வக்கீல் காந்திக்குச் சிரத்தை அதிகம். இதனால் அவருடைய கீர்த்தி பரவித் தொழிலும் பெருகியது; நான்கு குமாஸ்தாக்களை நியமிக்க வேண்டியதாயிற்று. அவர்களுள் குமாரி ஷ்லெஸின் என்ற ஜெர்மன் பெண்ணும் ஒருவர். காந்தி ஆங்கிலப் பாணியில் உடை தரித்து வந்தார்; ஐரோப்பிய நண்பர்களை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். கிறிஸ்தவர், ஹரிஜனங்கள் உள்பட குமாஸ்தாக்களின் கம்மோடுகளை அவரே கழுவினார். இவ்வேலைகளைக் கஸ்தூரிபாயும் அவருடன் பகிர்ந்துகொண்டார். |
|
ரஷியாவின் டால்ஸ்டாய், இங்கிலாந்தின் ரஸ்கின், இந்தியாவின் ராய்சந்த்பாய் - இந்த மும்மூர்த்திகளும் காந்தியிடம் மறைந்து கிடந்த உன்னதக் கருத்துக்களுககு உருக்கொடுத்தார்கள். கடவுளுக்கும் சகோதர மனிதர்களுக்கும் அவர் மாபெரும் சேவைகளைப் புரிவதற்கும் ஆதாரமாக இருந்த கருத்துக்கள் அவை. உழைத்துப் பிழைப்பது, பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம் ஆகியவை சம்பந்தமாகக் காந்தி கொண்டிருந்த கருத்துக்கள் இப்பெரியார்களின் நூலில் எதிரொலித்தன. ஹிந்து சாஸ்திரங்களின் பாஷ்யக் களஞ்சியமாக ராய்சந்த் விளங்கினார். காந்தீய சாத்வீக போராட்ட முறையின் மாபெரும் சாத்தியங்களை டால்ஸ்டாய் தீர்க்க திருஷ்டியுடன் முன்கூட்டியே குறிப்பிட்டிருந்தார். 'கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற ரஸ்கினின் நூல்தான் சமுதாய வாழ்க்கை நடத்த, போனிக்ஸ் குடியேற்றத்தை அமைப்பதற்குக் காந்திக்கு ஆதர்சம் அளித்தது. பல்வேறு நாட்டினரும் அக்குடியேற்றத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். தோட்டி வேலை முதல் சகல வேலைகளையும் அவர்களே செய்து கொண்டனர். தமது கருத்துக்களைப் பரப்பவும் இந்திய சமூகத்தினரை ஒன்றுபடுத்தவும் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற சஞ்சிகையைப் போனிக்ஸில் காந்தி ஆரம்பித்தார். |
|
|
|
| |
Website
Designed by Gandhi Iyakkam, Thanjavur |
|