மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 8
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


அவருக்கு வேண்டிய பணிவிடைகளைக் கஸ்தூரி பாய் பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். நாடோறும் கணவருக்குக் கால் பிடிப்பார். அதே போல் கஸ்தூரிபாய் அசௌக்கியமடைந்தால் காந்திதான் அவருக்கு மருத்துவத்தாதி.

ஆச்ரமவாசிகளுக் கெல்லாம் "பா"வாக (அன்னையாக) கஸ்தூரிபாய் விளங்கினார். எல்லோரிடமும் அவர் அன்பைச் சொரிந்தார். காந்தியுடன் நிழல்போல கூடச் சென்றார் அவர். எத்தகைய அபூர்வ ஜோடி! மக்களின் நலமே இருவருக்கும் குறிக்கோள். இருவருக்கும் இடையே பூரண நல்லுணர்வும், அன்பும், மரியாதையும் நிலவின.
தீண்டாமை ஒழிப்பு வேலை சம்பந்தமாக 1937 ஜனவரியில் தென் இந்தியாவுக்குக் காந்தி விஜயம் செய்தார். சத்தியாக்ரஹமும், தீவிர கிளர்ச்சியும் நடத்தியதன் விளைவாக அங்குப் பல ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசம் சாத்தியமாயிற்று.
அதே ஆண்டில் பல மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. அப்போது அரசியல் கைதிகளின் விடுதலையில் காந்தி கவனம் செலுத்தலானார்.
கடுமையான வேலை கரணமாக 1937 இறுதியில் காந்தியை இரத்த அழுத்த நோய் பீடித்தது. ஜூஹூ கடல்வாசஸ்தலத்தில் அவர் ஓய்வெடுக்கச் சென்றார். காலில் செருப்புக்கூட இல்லாமல் கடற்கரையில் அவர் உலாத்துவார்; வழியில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவார்.
1938 பிப்ரவரியில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஹரிபுரா காங்கிரஸ் நடைபெற்றது. காந்தியின் வேண்டுகோள் பேரில் நந்தலால் போஸ் அம்மகாநாட்டு ஸ்தலத்தைக் கலைக்கோவிலாக நிர்மாணித்திருந்தார். உ.பி., பீஹார் மந்திரிசபை நெருக்கடிகள், சிறுபான்மையோர் உரிமைகள், அரசியல் கைதிகளின் விடுதலை முதலியவை சம்பந்தமாகப் பல முக்கிய தீர்மானங்களை மகாசபைக் கூட்டம் நிறைவேற்றியது.
கவர்னர்களின் விசேஷ அதிகாரங்கள் சம்பந்தமாக ஏற்பட்டிருந்த ராஜீய நெருக்கடி சுமுகமாகத் தீர்ந்தது. காங்கிரஸ் - லீக் ஒத்துழைப்புக்கு வழி செய்வதற்காகப் பிப்ரவரியில் ஜின்னாவைக் காந்தி சந்தித்துப் பேசினார்; பலன் கிடைக்கவில்லை. பிறகு பட்டாணியரின் எல்லை மாகாணத்துக்கு அவர் புறப்பட்டார். பஞ்சாபில் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் ஜனங்கள் அளித்த ஆரவார வரவேற்புகள் காந்திஜியைத் திணற வைத்தன. நிதானமாக நடக்கும்படி ஜனக் கூட்டங்களைக் கூப்பிய கரங்களுடன் காந்தி கேட்டுக் கொண்டார்.

எல்லை மாகாணத்தில் பல கிராமங்களுக்கு காந்தி விஜயம் செய்து அஹிம்ஸா தர்மத்தை பறைசாற்றினார். கபார்கானின் செஞ்சட்டைச் சீடர்கள் (குதாய் கித்மத்கார்) இரவு பகலாகப் பாடுபட்டுக் காந்தியின் சுற்றுப் பிரயாணத்தை வெற்றி கரமாக்கினர்.

எல்லை மாகாணச் சுற்றுப் பிரயாணம் முழுவதிலும் காந்தியுடன் பாத்ஷாகான் (கபார் கான்) சென்றார். அவர் காந்தியின் உத்தமச் சீடர். சத்தியம், அஹிம்சை, தீரம், நேர்மை என்ற பண்புகளில் உருவமாகத் திகழ்ந்த அவரை "எல்லைக் காந்தி" என்று எல்லோரும் அழைத்தனர். தட்சசீலத்தில் அவரிடம் காந்தி விடைபெற்றபோது இருவர் கண்களிலும் நீர்மல்கியது. எல்லை மாகாணக் கிராமங்களில் போய் வாழ வேண்டும் என்று கூடக் காந்தி ஆசைப்பட்டார்.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur