மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 14
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0

 

1947 ஜூனில் தேசப் பிரிவினை தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்வதற்காக டில்லியில் அ.இ.கா.க.கூடியது. அங்கு காந்தி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- "இந்தியாவைப் பிரிவினை செய்வதை ஆயுள் முழுவதும் நான் உறுதியுடன் எதிர்த்து வந்திருக்கிறேன். எனினும் பிரிவினைத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துவதற்கு இங்கு இப்போது வந்துள்ளேன். எல்லாக் கட்சிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவு இது; காங்கிரஸ் மாத்திரம் வாக்கு மீறினால் நன்றாக இருக்காது. பிரிவினைத் தீர்மானத்தைப் புறக்கணித்து அட்சி பொறுப்பை ஏற்பதற்கு எனக்குச் சக்தி இல்லை. காலப்போக்கில், இந்தியா பாகிஸ்தானிடையே இதய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்"
ஆகஸ்டில் காஷ்மீருக்குக் காந்தி விஜயம் செய்தார். சில தினங்களில் அங்கிருந்து பஞ்சாபுக்குப் புறப்பட்டுவிட்டார். பஞ்சாபில் வகுப்புக் கலகம் மும்முரமாக இருந்தது. இஸ்லாத்தைத் தழுவுவதா அல்லது இறப்பதா என்ற நிலைமை காரணமாக ஏராளமான பேர் மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக ஓடிவந்த கொண்டிருந்தனர். அவர்களுக்குக் காந்தி கூறிய புத்திமதி வருமாறு:- "மேற்கு பஞ்சாபிலிருந்து ஜனங்கள் குடிபெயர்ந்துவருகிறார்கள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். லாகூர் இறந்துவிட்டதென்றோ, இறந்து கொண்டிருக்கிறதென்றோ நீங்கள் கருதினால் அங்கிருந்து ஓடிவராமல், செத்துக் கொண்டிருக்கும் அந்நகரத்துடன் நீங்களும் சேர்ந்து சாக வேண்டும்"

1947 ஆகஸ்ட்டில் இந்தியா பிரிவினை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் முலாவது சுதந்திர தினத்தன்று தலைநகரக் கொண்டாட்டங்களில் காந்தி கலந்து கொள்ளவில்லை; ஹிந்து - முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக அவர் அப்போது கல்கத்தாவில் பாடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது ஜாகைமுன் இரு வகுப்பாரும் சகோதர பாவத்துடன் கட்டித் தழுவிக் கொண்டனர். சுதந்திர தினத்தை அவர் உபவாசத்திலும் நூற்பதிலும் கழித்தார்; சுதந்திர தினச் செய்தி எதையும் அவர் விடுக்கவில்லை.

கல்கத்தாவில் பலியாகட்டாவிலுள்ள ஒரு முஸ்லிமின் ஜாகையில் காந்தி தங்கினார். ஹிந்துக்களால் பயமுறுத்தப்பட்ட பிரதேசம் இது. வங்காளப் பிரிவினையைத் தடுப்பதற்காக நேத்தாஜி போஸின் அண்ணாவாகிய சரச்சந்திர போஸ் அப்போது முயன்று வந்தார். இதற்காக அவர் காந்தியுடன் சம்பாஷணை நடத்தினார்.

வங்காளப் பிரதமராக இருந்தபோது காலித்தனத்தை ஒடுக்கவில்லை என்பதற்காக சுஹ்ரவர்த்திக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. காந்தி அவரை அந்தரங்க சுத்தியுள்ளவர் என்று நம்பி வகுப்பு ஒற்றுமை வேலையில் அவரை ஈடுபடுத்த முயன்றார். நல்லெண்ண சமிக்ஞையாகக் காந்தியின் ஜாகையில் தாமும் தங்குவதற்கு சுஹ்ரவர்த்தி சம்மதித்தார்.

ஆகஸ்ட் 18உ ஈத் பெருநாளன்று முஸ்லிம்கள் மூவர்ணக் கொடிகளுடன் திரளாக வந்து காந்திக்கு வாழ்த்துக் கூறினர். கல்கத்தா மைதானத்தில் நடந்த ஈத் கொண்டாட்டக் கூட்டத்தில் காந்தி மௌன விரதத்தையும் மீறிப் பேசி முஸ்லிம்களை வாழ்த்தினார்.

தற்காலிக அமைதிக்குப் பின் கல்கத்தாவில் மறுபடி வகுப்புக் கலவரம் மூண்டது. இதனால் காந்தி நவகாளி செல்வதை நிறுத்தி, செப்டம்பர் 1உ உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். பல்வேறு தலைவர்களும் அரும்பாடுபட்டு வகுப்பு ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டினர். இம் முயற்சியில் இரு ஹிந்து ஊழிர்கள் உயிர் இழக்கவும் நேரிட்டது. செப்டம்பர் 4உ காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur