மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 3
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தைக் காந்தி எதிர்த்த போதிலும் 1899ல் போயர் யுத்தத்திலும், 1906ல் ஜூலு கலகத்திலும் அவர் இந்தியத் தொண்டர் படையில் சேர்ந்து பணியாற்றினார். மனித சேவா உணர்ச்சியாலும் இந்தியரின் மதிப்பை வெளிப்படுத்தும் விருப்பத்தாலுமே அவர் இவ்வாறு செய்தார். சர்க்காரும் பதக்கங்களை வழங்கிக் காந்தியைக் கௌரவித்தது.
ஆசியாக்கரர்களுக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு - எதிராகத் தென் ஆப்பிரிக்க சர்க்கார் பல சட்டங்களை அமல் நடத்தி வந்தது. குடியேற்றத் தடை மசோதாவை எதிர்த்துக் காந்தி தலைமையில் இந்தியர்கள் போராட்டத்தைத் தொடங்கிச் சிறை புகுந்தனர். 1908ல் காந்திக்கு இரண்டு வருஷ வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது முயற்சிகளுக்கு உதவி செயவதற்காகக் கோக்கலே 1912ல் தென் ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்தார். கோக்கலேயைத் தமது அரசியல் குருவாகக் காந்தி கருதினார். காந்தியின் வேலைகளில் கோக்கலேக்கும் சிரத்தை ஏற்பட்டது. "மகாசீவர்களின், உயிர்த்தியாகிகளின் லக்ஷணங்கள் இந்த மனிதரிடம் குடிகொண்டுள்ளன. பிரம்மாண்ட ஆத்மீக சக்தி வாய்ந்தவர் இவர்", என்பது காந்தியைப் பற்றி கோக்கலேயின் வாக்கு.
கோக்கலே சமரஸ முயற்சி செய்ததன் விளைவாக அநியாய "கருப்பர் சட்டத்தை" ரத்துச் செய்வதாகத் தென் ஆப்பிரிக்க சர்க்கார் வாக்களித்தது. ஆனால் அந்த வாக்கை நிறைவேற்றவில்லை. ஆதலால் மீண்டும் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கக் காந்தி முடிவு செய்தார். அவர் மேற்கத்தி உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, சக தொண்டர்களைப் போல் தாமும் லுங்கியையும் ஜிப்பாவையும் அணிந்து கொண்டார். இந்தத் தொண்டர்களில் மிகப் பெரும்பாலோர் தமிழர்கள். காலன்பாக் என்ற ஜெர்மானியரும் காந்தியின் அருமந்த சீடர் ஆனார். கட்டிட சிற்பியான அவருக்கு ஏராளமான வருமானம் கிடைத்து வந்தது. அவர் தம் நிதியையும், திறமையையும் தாரளமாக நல்கிக் காந்திக்கு உதவி செய்தார். 1910ல் அமைக்கப்பட்ட டால்ஸ்டாய் பண்ணைக்கான செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். அதோடு காந்தியின் தோராட்டங்களிலும் கலந்துகொண்டார்.

ஸ்ரீ.போலக்கும் அவரது மனைவியாரும் காந்தியின் உறுதுணைவர்கள். போனிக்ஸ் குடியிருப்பில் அவர்களும் உறுப்பினர்கள்.
அக்காலத்தில் காந்தியைப் போலவே கஸ்தூரிபாயும் பலவீனராக இருந்தார். ஆனால் அவரது உறதி மலைபோன்றது. அவர் சத்தியாக்கிரகியாகச் சேர்ந்து 1908-ல் சிறை புகுந்தார். அன்று முதல் காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவர் தீவிரப் பங்கு எடுத்து வந்தார். 2037 ஆண்கள், 127 பெண்கள், 57 குழந்தைகள் ஆகியோர் அடங்கிய சத்தியாக்கிரகப் படை, பிரசித்தி பெற்ற யாத்திரையை 1913ல், ஆண்டவனின் பெயரால் ஆரம்பித்தது. அவர்களில் நூறறுக்கணக்கான பேர் சிறை புகுந்தனர்; சிரமப்பட்டனர்; சிலர் உயிரையும் கொடுத்தனர். வள்ளியம்மா என்ற 16 வயதுத் தமிழ்ப் பெண்ணும், ஹர்பத் சிங் என்ற 75 வயதுக் கிழவரும் இவ்விதம் பிராணத்தியாகம் செய்தவர்களில் இருவர்.
தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு நியாயம் பெறுவதற்காக ஜெனரல் ஸ்மட்ஸுடனும் அவரது சர்க்காருடனும் காந்தி 20 வருஷ காலம் போராட்டம் நடத்தினார். 1914ல் இருவரும் செய்துகொண்ட தற்காலிக ஒப்பந்தத்தின் விளைவாக அறப்போர் நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வாண்டே காந்தி தென் ஆப்பிரிக்காவிடம் இறுதியாக விடை பெற்றுக் கொண்டார். அவர் ஒரு மகா புருஷராக, மாபெருந் தலைவராக உருவானது அந்நாட்டில்தான்.
கோக்கலேயைச் சந்திப்பதற்காகக் கஸ்தூரிபாயுடன் இங்கிலாந்திற்குக் காந்தி சென்றார். அப்போது முதலாவது உலக மகா யுத்தம் மூண்டது; பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உதவுவது தம் கடமையென்று கருதி வைத்தியத் தொண்டர் படை யொன்றைக் காந்தி திரட்டினார். இப் படையினருக்கு வேண்டிய உடைகளைத் தயாரிப்பதில் கஸ்தூரிபாய் உதவி புரிந்தார். பின்னர் காந்தி தேக அசௌக்கியம் அடையவே இங்கிலாத்திலிருந்து புறப்பட வேண்டியிதாயிற்று.

 

0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur