1915ல் ஆமதாபத் அருகிலுள்ள கீரப் என்ற இடத்தில் சித்தியாக்கிரக ஆசிரமம் ஒன்றைக் காந்தி நிறுவினார். சத்தியம், அஹிம்சை, நாவடக்கம், திருடாமை, உடைமையில் பற்றில்லாமை, சுதேதி, அஞ்சாமை, தீட்ணாமை, தாய்மொழிக் கல்வி, கதராடை என்ற விரதங்களை ஆச்ரமவாசிகள் மேற்கொண்டனர். 1917ல் சபர்மதிக் கரைக்கு இந்த ஆச்ரமம் மாற்றப்பட்டது.
1916 முதல் 18 வரை பல சத்தியாக்கிரக இயக்கங்களைக் காந்தி நடத்தினார். 1917ல் ஒரு ஏழைத் தொழிலாளியின் வேண்டுகோளுக்கிணங்கிப் பீஹார் சென்று சம்பரான் குடியானவர்களின் கஷ்டத்தை நீக்குவதற்காக அறப்போரைத் தொடங்கினார். பின்னால் அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது சம்பரான் இயக்கம். ராஜேந்திர பிரசாத், கிருபளானி முதலியோர் அப்போதுதான் காந்தியின் சீடர்கள் ஆயினர். சர்க்காருடனும், தோட்ட முதலாளிகளுடனும் காந்தி பேச்சுவார்த்தை நடத்தி, குடியானவர்கள் கட்டாயமாக அவுரியைப் பயிரிடவேண்டும் என்ற வழக்கத்தை ஒழித்தார்.
அடுத்த வருஷம் ஆமதாபாத் மில் தொழிலாளர்களின் குறைகளை நீக்குவதற்காக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பேரில் தொழிலாளருக்குச் சாதகமான ஒப்பந்தம் 1918 மார்ச் மாதம் கைகூடிற்று. இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதலாவது உபவாசம் இது.
கேதா குடியானவர்களுக்கும் அஞ்சாமையைக் காந்தி போதித்தார். மகசூல் தீய்ந்துவிட்டதால் வரிகொடுக்க வேண்டாமென்று அவர்களுக்கு உபதேசித்தார்.
முதலாவது உலக யுத்தம் முடிந்தவுடன் ரௌலட் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தைச் சர்க்கார் கொண்டுவந்தது. அதுவரை ராஜவிசுவாசியாக இருந்து வந்த காந்தி இதனால் அதிர்ச்சியடைந்தார். அவருடைய கட்டளை பேரில் நாடெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. சர்க்கார் கொடிய அடக்குமுறையில் இறங்கியது 1919 ஏப்ரல் மாதம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. ஆனால் மக்கள் பணியவில்லை; அக்டோபர் மாதம் காந்தி கூறியபடி கிலாபத் தினத்தைக் கொண்டாடினர். இக்கிளர்ச்சியில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடுதோள் சேர்த்து நின்றனர். பின்னர் சாத்விக ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி ஆரம்பித்தார். விதேசிப் பண்டங்களைப் பகிஷ்கரிப்பதும், கதர் ஆடை அணிவதும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய ஸ்தானம் பெற்றன. |