மகாத்மா
காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன் |
| |
பாகம்: 6 |
|
|
வட்டமேஜை மகாநாட்டு அட்டவணை பற்றி விவாதிப்பதற்காக ஸிம்லாவிற்குச் சென்று வைஸ்ராய் லின்லித்தோவைக் காந்தி சந்தித்தார். அம்மகாநாட்டிற்குக் காந்தியே காங்கிரஸின் ஏகப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
|
லண்டன் செல்ல "ராஜபுதனா" என்ற கப்பலில் ஏறுவதற்காகக் காந்தி 1931 ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி பம்பாய் போய்ச் சேர்ந்தார். கஸ்தூரிபாயும் மற்ற சகாக்களும் அவரை வழி அனுப்பச் சென்றிருந்தனர். காந்தியின் கோஷ்டியில் பண்டித மாளவியா, சதோஜினி முதலியோர் இருந்தனர். புறப்படுமுன் காந்தி விடுத்த செய்தி வருமாறு:- "வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் கோடானுகோடி மக்களின் நலனுக்கு முரணாக இல்லாதபடி, எல்லாக் குழுவினர்களின் நலனையும் பிரதிபலிக்க நான் முயற்சிப்பேன். அந்தக் கோடானு கோடி மக்களுக்காகத்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது."
ஒற்றை வேஷ்டி உடுத்திக் கப்பலின் மேல்தளத்தில் நின்ற காந்தியை மற்றப் பிரயாணிகள் பார்த்துப் பார்த்து வியந்தனர். நூற்பு யக்ஞம் உட்பட ஆச்ரம அனுஷ்டானங்களையெல்லாம் கப்பலிலும் காந்தி நடத்திவந்தார். மேல்தளத்தில் பிரார்த்தனையும் நடத்தினார். குழந்தைகளுக்குத் திராட்சை, பேரீச்சை முதலிய பழங்களைக் கொடுத்து அகமகிழ்ந்தார். கப்பலின் கோணமானி, உயிர்காப்பு வளையம் முதலியவற்றின் உபயோகத்தை அவர் தெரிந்து கொண்டதுடன் கப்பலை ஓட்டியும் பார்த்தார். புது விஷயங்களில் அவருக்கு அவ்வளவு சிரத்தை. காந்தியிடம் கப்பல் காப்டன் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டார். "இரு வாரங்களுக்கு நான் உங்கள் கைதி" என்று அவரிடம் காந்தி கூறினார்.
1931 செப்டம்பர் 11 ஆம் தேதி மார்ஸேல்ஸ் துறைமுகத்துக்குக் கப்பல் போய்ச் சேர்ந்தது. "இந்தியாவின் ஆத்மிகத் தூதரை" வரவேற்பதற்காக அந்நகர வீதிகள் நெடுகிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றனர். லண்டனிலும் காந்தி அமோகமாக வரவேற்கப்பட்டார்; சில பத்திரிகைகள் மாத்திரமே அவரைக் கிண்டல் செய்தன. அந்நகரில் ஏழைகள் வாழும் "ஈஸ்ட் எண்ட்" பகுதியில் காந்தி தங்கினார். |
|
செப்டம்பர் 14உ திங்கள் கிழமையன்று காந்தி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொண்டார். அன்று அவரது மௌன தினம் ஆதலால் தம் கருத்துக்களை அவ்வப்போது எழுத்து மூலம் அக்ராஸனர் சாங்க்கே பிரபுவிடம் தெரிவித்தார். மறுநாள் அவர் மகாநாட்டில் பேசுகையில், "இந்தியாவும் பிரிட்டனும் கண்ணியமான, சம அந்தஸ்துள்ள பங்காளிகளாக இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் பிரிட்டனிலிருந்து புறப்பட விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டார். டிசம்பர் 1உ வரை இழுபறியாக நடந்த அம்மகாநாடு, அந்த "பிரம்மாண்ட போலி நாடகம்," காந்திக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஈஸ்ட் எண்டில் தங்கியிருந்த காலத்தில் ஸ்தல மக்களிடையே அவரது புகழ் ஓங்கியது. இந்தியாவுக்கு எல்லோரது நல்லெண்ணத்தையும் அவர் சம்பாதித்தார். அவர் பின் சென்ற இரு பிரிட்டிஷ் ரகசிய போலீஸார்களுக்கும் அவர் மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டது. கொடிய குளிர் காலமாக இருந்தும் அவர் காலை உலாவுதலை நிறுத்தவில்லை. பிரபல ஹாஸ்ய நடிகர் சார்லி சாப்ளினைத் தமக்குத் தெரியாது என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது. அவர் கோவணான்டி வேஷத்தில் மன்னரைப் பார்க்கச் சென்றதும், "எனக்கும் அவருக்கும் சேர்த்து மன்னரே நிறைய ஆடை அணிந்திருக்கிறார்," என்று கூறியதும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. |
|
ஈட்டன், ஆக்ஸ்போர்ட், லங்காஷயர் நகரங்களுக்குக் காந்தி சென்று உரை நிகழ்த்தினார்.வ விதேசித் துணி பகிஷ்காரத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த லங்காஷயர் மில் தொழிலாளரிடம் அவர் இந்தியாவின் நிலையை விளக்கினார் "உங்களில் 30 லட்சம் பேருக்குத்தான் வேலையில்லை. இந்தியாவிலோ கடந்த ஆறு மாதங்களாக 30 கோடிப் பேருக்கு வேலையில்லை. உங்கள் கஷ்டத்துக்கு இந்தியா மீது பழி சுமத்தாதீர்கள்" என்றார் அவர். |
|
காந்தி வழக்கத்துக்கு வீரோதமாக இங்கிலாந்தில் சிற்பி ஒருவரும், சைத்ரிகர் ஒருவரும் தம் உருவத்தைச் சமைப்பதற்கு அனுமதித்தார். ஆனால் தமது வேலைகளைச் செய்த வண்ணமே அவர்கள் முன் அமர முடியும் என்று நிபந்தனை விதித்திருந்தார். |
|
இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் பிரான்ஸ், ஸ்விட்ஜர்லாந்து, இத்தாலி தேசங்களுக்குக் காந்தி விஜயம் செய்தார். பிரெஞ்சு ஞானி ரொமெயின் லோலண்டுடன் ரோமாபுரியில் அவர் ஐந்து நாட்கள் தங்கி அளவளாவினார். காந்தியின் ஜீவிய சரித்திரத்தை எழுதியும், அவரது கருத்துக்களை மேற்கு நாட்டாரிடையே பரப்பியும் ரோலாண்ட் உதவினார். |
|
1931 டிசம்பர் 28உ காந்தி பம்பாய் திரும்பினார். அதற்கு முன்பு ஜவாஹர்லால், கபார்கான் உட்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் காரர்களைச் சர்க்கார் கைது செய்தனர். எல்லை மாகாணம், உத்தரப் பிரதேசம், வங்காளம் ஆகிய பிரதேசங்களல் அடக்குமுறை தாண்டவமாடியது. பம்பாயில் இறங்கிய அன்றே ஒரு பொதுக் கூட்டத்தில் காந்தி பேசினார். ஜனவரி 4உ அவரும் எரவாடா சிறையில் தள்ளப்பட்டார். "உங்கள் விலாசம் என்ன?" என்று பின்னொரு சமயம் கேட்டபோது, "எரவாடா ஜெயில்" என்று காந்தி பதிலளித்தார்! பலமுறை அங்கு வசிக்க நேர்ந்ததே இதற்குக் காரணம். ஜாதி ஹிந்துக்களையும் ஹரிஜனங்களையும் பிளவுபடுத்துவதற்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்வ முறையைப் பிரிட்டிஷ் சர்க்கார் அறிவித்தது. இதை எதிர்த்துச் சிறையில் 1932 செப்டம்பர் மாதம் 'சாகும் வரை' உண்ணாவிரதத்தைக் காந்தி மேற்கொண்டார். ஹரிஜன சேவை சம்பந்தமாகத் தம்மையும் தம் சகாக்களையும் பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் ஒருமுரை அவர் 21 நாள்கள் உபவாகம் இருந்தார். உண்ணாவிரதம் முடிவதற்குள், 1933 மே மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார். |
|
|
|
|
Website
Designed by Gandhi Iyakkam, Thanjavur |
|