பஞ்சத்தில் 50 லட்சம் பேரைப் பலி கொடுத்த வங்காளத்துக்கு ஆறுதல் கூறப் போகவேண்டும் என்று காந்தி தாம் விடுதலையான நாள் முதல் ஆவல் கொண்டிருந்தார். அவரது அசௌக்கியம் காரணமாக 1945 நவம்பரில்தான் கல்கத்தாவுக்கு விஜயம் செய்ய முடிந்தது. டிசம்பரில் வங்காளக் கவர்னரை அவர் பலமுறை சந்தித்து அரசியல் நிலைமை பற்றியும், காவல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் விவாதித்தார்.
டம்டம் சிறையில் காவல் கைதிகளையும் அவர் கண்டு பேசினார். எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரை இரட்சகராகக் கருதினர். கைதிகள் விடுதலைப் பிரச்னை பற்றி அவரை கேட்டபோது, "தேசபக்தர்களுக்குச் சுதந்திர மாளிகையின் ஆசார வாசல்தான் சிறைச்சாலைகள். அடிமை இந்தியாவே ஒரு பிரம்மாண்டமான சிறைதானே!" என்று பதிலளித்தார் காந்தி.
கல்கத்தாவில் டிசம்பரில் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்துக்குப்பின், காந்தி, சாந்திநிகேதனுக்குச் சென்றார். குருதேவர் டாகூரை இழந்து அந்நிலையம் தவித்துக் கொண்டிருந்தது. விசுவ பாரதியின் நிலைமை சம்பந்தமாக நிர்வாகிகளுடன் காந்தி விவாதித்தார். வேதனைப் படும் உலகத்துக்குச் சாந்தியை அளித்தவர் குருதேவர் என்று அவர் குறிப்பிட்டார். "தமது கீதங்களால் மாத்திரமற்றி, பேனாவாலும், தூரிகையாலும் கூட அவர் இந்தியாவுக்கு உலகெங்கும் புகழ் தேடித்தந்தார். கதகதப்பான இறக்கைகளால் காத்து இரட்சிக்கும் தாய்ப் பறவையை இழந்துவிட்டோம்" என்று அவர் கூறினார். |