மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 10
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


1942 ஆகஸ்ட் 8உ காந்தி முன்னிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி "வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. பிரிட்டனைத் "திணற வைக்கக் கூடாது என்ற எனது கொள்கைக்கு வரையறை உண்டு. அதாவது நமது கௌரவத்திற்கும் பந்தோபஸ்திற்கும் உட்பட்டதே அக் கொள்கை. எனது மென்னியை இறுக்கித் தண்ணீரில் மூழ்கடிக்க ஒருவன் முயன்றால் போராடி அவனது பிடியிலிருந்து தப்புவதற்கு எனக்கு உரிமையில்லையா? பூரண சுதந்திரத்திற்கு இம்மி குறைந்தாலும் ஏற்க மாட்டேன். இதோ உங்களுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறேன். 'செய் அல்லது செத்து மடி' என்பதே அந்தத் தாரக மந்திரம். இந்தியாவை விடுதலை செய்வோம்; இல்லையேல் அம்முயற்சியில் உயிரை விடுவோம். நிரந்தர அடிமைகளாக உயிர் வாழப் போவதில்லை" என்று முழங்கினார் காந்தி.

மறுநாள் காலை காந்தியும் காரியக் கமிட்டி மெம்பர்களும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் ஊழியர்களும் கைது செய்யப் பட்டனர். காங்கிரஸ் ஒரு சட்ட விரோத ஸ்தாபனம் என்று சர்க்கார் அறிவித்தது. எனினும், மக்கள் மலையாமல் போராடினர். புரட்சிப் புயலை ஒடுக்க அடக்கு முறைப் பாணங்களைச் சர்க்கார் ஏவி விட்டது.
புனாவில் உள்ள ஆகாகான் அரண்மனையில் காந்தி காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார். ஆகஸ்ட் 9உ ஒரு கூட்டத்தில் பேசவிருந்த கஸ்தூரிபாவும் கைதாகி, காந்தியுடன் சிறைவைக்கப்பட்டார். அவர்களுடன் சிறையிருந்த மகாதேவ் தேசாய் ஒரு வாரத்துக்குள் உயிர் துறந்தார். இந்தத் துக்கத்தால் காந்தியும் கஸ்தூரிபாவும் இடிந்து போயினர்.
நாட்டில் கலகத்தைத் தூண்டிவிட்டதாகக் காந்தி மீது சர்க்கார் குற்றஞ்சாட்டினர். இதைக் காந்தி மறுத்ததோடு, சர்க்கார்தான் "மிருகத்தனமான பலாத்காரத்தை" கையாண்டதாகப் பதிலுக்குக் குற்றஞ்சாட்டினார். இதைக் கண்டிப்பதற்காக 21 தின உபவாசத்தையும் அவர் மேற்கொண்டார். இதற்கிடையே மன அதிர்ச்சி காரணமாகக் கஸ்தூரிபாவின் தேகம் நலிய ஆரம்பித்தது. பாடபோதனை, பஜனை, டேபிள் - டென்னிஸ் போன்ற விளையாடுக்கள் ஆகியவற்றின் மூலம் அவரது தாக்கத்தை மாற்றுவதற்குக் காந்தி பாடுபட்டார்; ஆனால் இவை பலனளிக்கவில்லை; 1944 பிப்ரவரி 22உ காந்தியின் 63 வருஷத் துணைவியான கஸ்தூரிபா காலமானர். சிறைக் காம்பவுண்டுக்குள் அவரது சடலத்தைத் தகனம் செய்து, அஸ்தியை மகாதேவ் தேசாயின் அஸ்தியுடன் சிறைக்குள் பத்திரப்படுத்தினர். கஸ்தூரிபா, மகாதேவ் இருவரது சமாதிகளுக்கும் காந்தி தினந்தோறும் போய் வந்தார். இருவரது மரணமும் அவரை உருக்கிவிட்டது. எனினும் "பாவும் மகாதேவும் சுதந்திரத் தேவியின் பலி பீடத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்து விட்டனர். அவர்கள் அமரர்கள்" என்று காந்தி குறிப்பிட்டார்.
காந்திக்கு மலேரியா ஜுரம் கண்டதால் 1944 மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிகிச்சைக்காக அவர் பம்பாயில், ஜூஹூவில் சென்று தங்கினார். பேசுவதைக்கூட கட்டுப்படுத்திக் கொண்டு அவர் ஓய்வு எடுத்தார்.
நிர்மாண வேலைகளில் காந்தியின் நெருங்கிய சகாக்களில் ஒருவராகத் தக்கர் பாபா விளங்கினார். ஹரிஜன சேவைக்கே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர்.
ஜூலையில் மலைவாச ஸ்தலமான பஞ்சகனியில் காந்தி தங்கினார். பலவீனராக இருந்தும் அன்றாட உலாத்தலை அவர் நிறுத்தவில்லை; உலாவும்போது சகாக்களுடன் விவாதம் நடத்துவதும் நிற்கவில்லை.
ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக 1944 செப்டம்பர் 9உ பம்பாய்க்குக் காந்தி திரும்பினார். ஜின்னாவின் ஜாகைக்கு அவர் சென்று சென்று இரண்டு வார காலம் அயர்வின்றி விவாதித்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
நாட்டின் தனிப் பெருந் தலைவர் என்ற முறையில் அரசியல் விவகாரங்களில் காந்தி முனைந்திருந்த போதிலும், நிர்மாண வேலைகளையும் நிர்மாண வேலை ஸ்தாபனங்களையும் அவர் ஒரு கணங்ககூட மறக்கவில்லை. சர்க்காவில் தினந்தோறும் தவறாமல் நூற்று வந்தார். சில சமயங்களில் தக்ளியிலும், தனுஷ் தக்ளியிலும் நூற்றார். தமது ஜயந்தியைச் "சர்க்கா ஜயந்தி" என்று அவர் குறிப்பிடுவதுண்டு. கதர் மீது அவ்வளவு உயிர் அவருக்கு.

"சுதந்திரம், அஹிம்சையின் சின்னமான சர்க்காவின் கீதம் வீடெல்லாம் ஒலிக்கச் செய்வதுதான் உண்மையான கொண்டாட்டம்" என்பது அவர் கருத்து. காந்தி ஜயந்தி அன்று நாடெங்கும் நூற்பு யக்ஞம் நடத்தி, அவருக்கு நூல் சிட்டங்களை மலை மலையாகப் பரிசளித்தனர் மக்கள். டில்லியில் காந்தி தங்கியிருந்த ஜாகையில் தினந்தோறும் முக்கிய கூட்டங்களும் பேட்டிகளும் நடந்த வண்ணம் இருந்தன. காந்தித் தாத்தாவுடன் விலையாடக் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் மத்தியில் அவரும் குழந்தையாகிவிடுவார். உலாவவுவதற்கு "ஊன்றுகோல்களா"கவும் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur