மகாத்மா
காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன் |
| |
பாகம்: 1 |
|

|
போர்பந்தர் (சுதமபுரி) என்ற ஊரில் உள்ள வெள்ளைக்கல் வீடு ஒன்றில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். அவ் வீட்டின் உறுதியான சுவர்கள், பிரம்மாண்டமான நிலைகள், நாற்காலி மேஜையற்ற வெறுந்தரை முதலியவை அங்கு உதித்த புதிய மனிதரின் குணங்களுக்கு அறிகுறிகளாக இருந்தன. உள்வலிமை, கடுமையான எளிமை, விசாலம் ஆகியவையே அக்குணங்கள். |
|
அவ் வீட்டின் உரிமையாளரும் மோகன் தாஸின் தந்தையுமான கரம்சந்த் உத்தம் சந்த் காந்தி ஒரு கம்பீரமான புருஷர். அவரிடம் ஆடம்பரம் இல்லை; ஆனால் ராஜகளை உண்டு. போர்பந்தரிலும், ராஜ்கோடிலும் பல வருஷங்கள் திவானாக இருந்த அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது கத்தியவார் தலைப்பாகை. மன்னர்களின் மரியாதையைப் பெற்ற மதியூகி அவர். அவருக்கு வெடுக்கொன்று கோபம் வரும். ஆனால் நேர்மையிலிருந்து இம்மியும் பிறழமாட்டார். அவர் மதாபிமானியும் கூட.
மோஹன்தாஸின் தாயார் புத்லிபாய் மிகுந்த அடக்கமும் தெய்வபக்தியும் வாய்ந்தவர். அவருக்கு மோஹனிடம் வாத்ஸல்யம் அதிகம். பெற்றோர்களிடம் சிறுவர் காந்திக்கு மிகுந்த அபிமானமும் மரியாதையும் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு குதிரை வண்டியில் பள்ளிக்கூடம் செல்லுமாறு சொன்னபோது மாத்திரம் காந்தி மறுத்துவிட்டு நடந்தே சென்றார். |
|
ராஜ்கோட் சமஸ்தான திவான் பதவியை கரம் சந்த் காந்தி ஏற்றபின் அவரது குடும்பமும் போர்பந்தரிலிருந்து வெளியேறியது. ராஜ்கோட்டில் ஒரு சாதாரண வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதிலும் சத்திய உபாசனையிலும் மோஹன்தாஸுக்கு ஆர்வம் அங்குதான் பிறந்தது. நோய்வாய்ப்பட்ட தந்தைக்குச் சிகிச்சை செய்வதற்காக அவர் பள்ளிக்கூடம் விட்டபின், விளையாட்டு வகுப்பிற்குக்கூடச் செல்லாமல், ஓடோடியும் வருவார். |
|
மோஹன் தாஸ் ஏழாவது வயதில் ராஜ்கோட் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் பிரமாதக் கெட்டிக்காரர் என்று பெயர் எடுக்கவில்லை. விளையாடுவதற்குப் பதில் நீண்ட உலாத்தல்களே அவரது தேகப்பயிற்சி. பெருக்கல் வாய்ப்பாடு சுவாரஸ்யமாக இல்லை; சம்ஸ்கிருதம் சங்கடமாக இருந்தது; க்ஷேத்திர கணிதத்தில் மாத்திரம் அவருக்குச் சிரத்தை அதிகம். நேரம் தவறாமல் வருவது, தோழமை உணர்ச்சி, சத்திய நெறி முதலிய அவரது உயர் குணங்களை எடுத்துக்காட்டும் சந்தர்ப்பங்கள் பல பள்ளியில் நிகழ்ந்ததுண்டு. ஒரு முறை உபாத்தியாயர் தூண்டியும்கூட அடுத்த பையனைப் பார்த்துக் 'காப்பியடிக்க' அவர் கண்டிப்பாக மறுத்துவிட்டார். ஆனால் சில சமயங்களில் அவர் புலால் உண்டார். தேக பலம் பெற்றுத் தேசத்தை விடுதலை செய்வதற்கான 'சீர்திருத்தம்' என்று அதை அவர் அப்போது கருதினார்.
இவ்விதம் கள்ளத்தனமாக மாமிசம் சாப்பிடுவதில் மோஹன் தாஸுக்கு அவர் அண்ணா ஒரு கூட்டாளி; சாப்பாட்டுச் செலவு சம்பந்தமாக அண்ணாவிட்ம் வாங்கிய கடனைக் கொடுப்பதற்காக ஒரு நாள் மோஹன் தாஸ், வீட்டிலிருந்து சிறிது தங்கத்தைத் திருடினார். பிறகு இக்குற்றத்தைத் தானே தந்தை முன் ஒப்புக்கொண்டு பச்சாதாபப் பட்டார். இதைக் கேட்டு பரம்சந்த் உள்ளம் உருகிக் கண்ணீர் விட்டார். அஹிம்சையில் ஒரு படிப்பினை போல இருந்தது இச் சம்பவம். மோஹன் தாஸுக்கு ரலியத் பென் என்ற ஒரே ஒரு சகோதரி உண்டு. பிற்காலத்தில் தம் விதவைச் சகோதரிக்குக் காந்திஜி மாதம் 10 ரூபாய்தான் அனுப்பி வந்தார். கோதுமை அரைத்துச் சுயமாகவும் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளும் படி அவளுக்கு யோசனை கூறிவிட்டார்.
1883ஆம் வருஷம் கஸ்தூரிபாயை மோஹன் தாஸ் கல்யாணம் செய்துகொண்டார்; இருவருக்கும் ஒரே வயது. 16 வயதில் மோஹன் தாஸ் தந்தையை இழந்தார். இரு ஆண்டுகள் கழித்து மெட்றிகுலேஷன் முடிந்து, பவநகரிலுள்ள சியாமளதாஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சில மாதங்கள் படிப்பதற்குள் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அவரை இங்கிலாந்திற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. நாடு திரும்பியபின் தந்தையைப் போல அவரும் திவானாவார் என்று எதிர்பார்த்தனர். மது, மாதர், மாமிசம் மூன்றையும் தொடுவதில்லை என்று மோஹன் தாஸ் சபதம் செய்தபிறகு அவரை இங்கிலாந்திற்குச் செல்லத் தாயார் அனுமதித்தார். |
|
|
|
| |
Website
Designed by Gandhi Iyakkam, Thanjavur |
|