மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 5
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0


கதர் வேஷ்டி, ஜிப்பா, காந்திக் குல்லாய் என்ற புதிய உடை மோஸ்தரைக் காந்தி ஆரம்பித்து வைத்தார். இது சுதந்திர வீரர்களின் ராணுவ உடுப்பாகப் பெருமை பெற்றது. 1921 அக்டோபரில் இந்த உடையையும் காந்தி குறைத்துக்கொண்டு முட்டுக்கு மேல் துண்டு உடுத்த ஆரம்பித்தார். அரை நிர்வாணப் பக்கிரி" என்று சர்ச்சில் ஏளனம் செய்தார்; ஆனால் டாகூரோ, "ஆண்டி வேஷம் புனைந்த மகாத்மா" என்று போற்றினார்.
1921 டிசம்பரில் ஆமதாபாத் காங்கிரஸ் நடந்தது. அப்போது சட்ட மறுப்பு இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்தது. புதிய காங்கிரஸ் அக்ராசனர் ஸி.ஆர்.தாஸ் உட்பட பல்லாயிரக் கணக்கான காந்தீயச் சீடர்கள் சிறையில் இருந்தனர். மக்களுக்குத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு முழுவதும் காந்தி மீது விழுந்தது. அன்று முதல் காந்திதான் காங்கிரஸ், காங்கிரஸ்தான் காந்தி என்ற பேதமற்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மக்களைப் போராட்டத்திற்குத் தயாராக்குவதற்காகக் காந்தி சுற்றுப்பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்; புரட்சிக் கனலை மூட்டினார். ராஜாங்க துவேஷப் பிரசாரம் செய்ததாக 1922 மார்ச் மாதம் அவருக்கு 6 வருஷ சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தேக அசௌக்கியம் காரணமாக 1924ல் அவர் விடுதலையானார்.

இதற்கிடையே ஹிந்து-முஸ்லிம் உறவு மோசம் அடைந்து, டில்லி, நாகபுரி, லக்ஷ்மணபுரி முதலிய நகரங்களில் கலவரம் எழுந்தது. இதற்குக் காந்தி தம்மையே நொந்துகொண்டு டில்லியில், முகமத் அலி இல்லத்தில் 21 தின பிராயச்சித்த உபவாசத்தை மேற்கொண்டார்.
பிறர் வேண்டுகோளுக்கிணங்கி 1924ல் பெல்ஹாம் காங்கிரஸிற்குக் காந்தி அக்கிராசனர் ஆனார். அதற்கு முன்போ பின்போ அவர் இப்பதவியை வகிக்கவே இல்லை. நூற்றுக்கு நூறு சுதேசி, சர்வ கட்சி ஐக்கியம் என்ற கொள்கைகளை வற்புறுத்தி அங்கு இரத்தினச் சுருக்கமாகப் பேசினார். வேறு எந்த அக்கிராசனரும் இவ்வளவு சுருக்கமான பிரசங்கத்தை நிகழ்த்தியதில்லை. ராட்டையில் நூற்பவர்கள்தான் காங்கிரஸில் சேரலாம் என்ற விதியைக் காந்தி ஏற்படுத்தினார். சர்க்கார் பொறித்த மூவர்ணக் கொடியைக் காந்தி ஏற்றி வைத்தார். நாடு சுதந்திரம் பெறும்வரை அதுவே தேசியக்கொடியாக விளங்கி வந்திருக்கிறது.
பெல்ஹாம் காங்கிரஸ் முடிந்ததும் காந்தி சுற்றுப் பிரயாணத்தில் முனைந்தார். அப்போது சாந்திநிகேதனிலும் டாகூருடன் அவர் சிறிது காலம் தங்கினார். அப்போதைய முக்கிய பிரச்னைகளைப் பற்றி இரு பெரியாக்ளும் மனம்விட்டு விவாதித்தனர். பின்னர் நோய்வாய்ப்பட்டிருந்த ஸி.ஆர்.தாஸுடன் டார்ஜீலிங்கில் காந்தி ஐந்து நாட்கள் தங்கினார். அதன்பின் சில தினங்களில் தேச பந்து தாஸ் தேக வியோகம் அடைந்தார். லோகமானிய திலகரின் மரணத்தைத் தொடர்ந்து இதுவும் வந்ததால் இந்தியா அதிர்ச்சி அடைந்தது. 'நாயகனை இழந்த' வங்காளத்துக்கு ஆறுதல் அறிப்பதற்காகக் கல்கத்தாவில் காந்தி மேலும் சில தினங்கள் தங்கினார்.
1927ல் ஜவாஹர்லால் நேரு தலைமையில் கூடிய லாகூர் காங்கிரஸில் பூரண சுதந்திரமே குறிக்கோள் என்று தீர்மானிக்கப்பட்டது. இது சித்தியாவதற்காக உப்புச் சட்டங்களை மீறுவதன் மூலம் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தக் காந்தி உத்தேசித்தார். உப்பைக் கூட ஏழை மக்கள் இஷ்டம் போல் உபயோகிக்க முடியாது என்பது அடிமை வாழ்வின் கொடுமையை எடுத்துக் காட்டியது. சபர்மதி ஆச்ரம பிரார்த்தனைக் கூட்டங்களில் இந்தப் போராட்டத் திட்டத்தைக் காந்தி விளக்கினார்.

1930 மார்ச் 12 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு 78 தொண்டர்களுடன் சபர்மதியிலிருந்து காந்தி புறப்பட்டார். இதுவே சரித்திரப் பிரசிச்தி வாயந்த தண்டி யாத்திரை. 24 நாள்களில் 241 மைல் தூரத்தைக் ஏப்ரல் 2 ஆம் தேதி தண்டியை அவர்கள் அடைந்தார். யாத்திரையின் கடைசிக் கட்டத்தில் சரோஜினி நாயுடுவும் கூடச் சென்றார். இயற்கை உப்பை ஒரு பிடி எடுத்ததன்மூலம் உப்புச் சட்டத்தைக் காந்தி உடைத்தார். உடனே "சட்ட மறுப்பு வீரருக்கு" கதர் நூல் மாலையை சரோஜினி சூட்டினார். மே 4ஆம் தேதி காந்தி கைது செய்யப்பட்டார். தண்டி யாத்திரையால் நாடெங்கும் உத்வேகம் பிறந்தது; ஏராளமான மாதர்களும் உப்பு யுத்தத்தில் குதித்தனர். லண்டனில் நடக்கவிருந்த வட்டமேஜை மகாநாட்டிற்குக் காங்கிரஸின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம் என்று சர்க்கார் கருதியதால் 1931 ஜனவரி 25ஆம் தேதி காந்தி விடுதலை செய்யப்பட்டார். காந்தி - இல்வின் ஒப்பந்தத்தின் மூலம் காங்கிரஸின் கோரிக்ககைளில் பெரும்பாலானவற்றைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டது.
காந்தியின் தண்டி யாத்திரையின்போது மோதிலால் நேரு தமது அரண்மனையான "சுயராஜ்ய பவனத்தை" தேசத்திற்குத் தானம் செய்தார். காந்தியின் கருத்துக்களை எல்லாம் மோதிலால் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவரது முக்கிய சகாவாக விளங்கி வந்தார். சட்ட சபை முனையில் அவர் மாபெரும் வீரர். மரணப் படுக்கையிலிருந்த அவர் காந்தியிடம் கூறிய கடைசி வார்த்தைகள் வருமாறு:-
"மகாத்மாஜி, நான் சீக்கிரம் போய்விடுவேன்;
சுயராஜ்யத்தைக் கண்ணால் பார்க்க நான் இங்கு
இருக்க மாட்டோன். ஆனால் அதை நீங்கள் பெற்று
விட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்."
முக்கியத்துவம் நிறைந்த கராச்சி காங்கிரஸ் 1931ல் கூடியது. அக்கூட்டம் திறந்த வெளியில் நடந்தது. காந்தியின் பதினொரு அம்சங்கள், ஜவாஹர்லாலின் பிரேரணைகள் சில - ஆகியவை சேர்ந்த மக்களின் ஜீவாதார உரிமைச் சாசனத்தைக் கராச்சி காங்கிரஸ் தயாரித்தது. வட்ட மேசை மகாநாட்டிற்குத் தூது கோஷ்டியை அனுப்பவும் பூரண சுதந்திரக் கோரிக்கையை வற்புறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. கலை வேலைப்பாடமைந்த மேடையிலிருந்து காந்தி உரை நிகழ்த்தினார். ஸ்தல பொருட்களைக் கொண்டு குடிசைகளின் உருவத்தில் காங்கிரஸ் மைதானத்தின் வாசல்கள் அமைக்கப்ட்டிருந்தன. இந்த இந்தியச் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் காந்தியே.
அவ்வருஷம் அரசியல் அலுவல்கள் அதிகமாக இருந்தும் குஜராத்தி வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை வகிக்கக் காந்தி சம்மதித்தார். ஆமதாபாத்தில் அவரே நிர்மானிக்க தேசியக் கல்லூரி அது. ஒழிந்த நேரங்களில் அங்கு அவர் பாடபோதனை நடத்தியதும் உண்டு.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur