மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன்
 
பாகம்: 12
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0

 

ஏப்ரல் 1உ டில்லிக்கு காந்தி போய்ச் சேர்ந்தார். இந்திய அரசியல் கட்சிகளுடன் சம்பாஷணை நடத்துவதற்காகப் பிரிட்டனிலிருந்து வந்திருந்த "மந்திரிகள் தூது கோஷ்டி"யையும், வைஸ்ராயையும் அங்கு காந்தி சந்தித்துப் பேசினார். கட்சிகளிடையே ஒற்றுமை காண்பதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக எழுந்த அகால ஹேஷியங்களைக் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.
தூதுகோஷ்டியில் இருந்த ஸர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ், லார்டு பெதிக் லாரன்ஸ், அலெக்ஸாண்டர் ஆகியோருடன் காந்தி மனம்விட்டுப் பேசினார். அதிகாரத்தைக் கைவிட வழி செய்வதற்காகவே அவர்கள் வந்திருப்பதற்காகக் காந்தி நம்பினார்.
காந்தி டில்லியில் இருந்தபோது நோய் வாய்ப்பட்டிருந்த பண்டித மாளவியாவைப் பார்க்கச் சென்றார். இருவரும் 1915 முதலே நெருங்கிய சகாக்கள், வைதிக விதிகளில் மாளவியாஜிக்கு உறுதியான நம்பிக்கை இருந்தபோதிலும், ஹரிஜன முன்னேற்ற வேலையில் அவர் காந்தியுடன் நன்கு ஒத்துழைத்தார்.

தேசியப் பிரச்னைகள் பற்றி ஜவாஹர்லால் நேரு அடிக்கடி காந்தியைக் கலந்து பேசிவந்தார். அவரைத் தமது அரசியல் வாரிசாகக் காந்தி தேர்ந்தெடுத்திருந்தார். நாட்டின் மாபெரும் பொறுப்பை ஏற்பதற்காக 1920 முதலே அவரைக் காந்தி தயாரித்து வந்தார். காங்கிரஸ் அக்கிராசனராகவும், காரியதரிசியாகவும் ஜவாஹர்லால் நேரு பலமுறை செயலாற்றினார். இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டதுமுண்டு; ஆனால் அன்பு, பாசம் மாத்திரம் அறுந்ததே கிடையாது.
டில்லியில் ஹரிஜனங்கள் வாழும் பங்கிக் காலனி"யிலேயே காந்தி தங்கி வந்தார். தேசிய வாரத்தில் முதல் - கடைசி தினங்களாகிய ஏப்ரல் 6 - 13 தேதிகளில் காந்தி முகாமில் உபவாகமும் நூற்பு யக்ஷமும் யக்ஞமும் நடைபெற்றன; பிரபல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
டில்லியில் காந்திக்கு வேலை கடுமையாக இருந்தது; அதிகாலை முதல் அகால இரவு வரை ஓய்வே யில்லை. முக்கியத் தலைவர்களுடன் அவர் மணிக்கணக்காக மந்திராலோசனை நடத்தி வந்தார்.

1946 ஜூலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியது. அரசியல் நிர்ணய சபையை அமைக்கவேண்டும் எனப் பிரிட்டிஷ் மந்திரிகள் கோஷ்டி தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. அக் கோஷ்டியுடன் சம்பாஷணை நடத்தியர்களுள் முக்கியமானவர்கள் ஆஜாத், பட்டேல், நேரு ஆவர்.

இடைக்கால சர்க்கார் ஒன்றை அமைக்குமாறு வைஸ்ராய் தெரிவித்த திட்டத்தைக் காங்கிரஸ் ஏற்றது. கூட்டு மந்திரி சபை அமைக்கலாம் என ஜின்னாவிற்கு நேரு வேண்டுகோள் அனுப்பினார். ஆனால் ஜின்னா அதற்குச் சம்மதியாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதியை "நேரடி நடவடிக்கை தினமாக" அனுஷ்டிக்கும்படி முஸ்லிம் லீகிற்குக் கட்டளையிட்டார். இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களில், குறிப்பாக வங்காளத்தில், பயங்கரமான, வகுப்புக் கலகம் மூண்டது. பலாத்காரம் தலைவிரித்தாடியது. நவகாளியிலும், கல்கத்தாவிலும் ஹிந்து - முஸ்லிம்கள் பரஸ்பரம் ரத்தக் களறியில் இறங்கினர்; எண்ணற்ற நபர்கள் உயிர் இழந்தனர்; கணக்கற்ற பொருள் சேதம் ஏற்பட்டது.
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
0
 
Website Designed by Gandhi Iyakkam, Thanjavur