மகாத்மா
காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு - அரிய படங்களுடன் |
| |
பாகம்: 7 |
|
|
1904 முதலே காந்திஜியின் அலுவல்களில் எல்லாம் கஸ்தூரிபாய் பங்காளியாக இருந்து வந்தார். முதலில் அவர் தமது பிடிவாதப் புருஷருக்குப் பணிய நேர்ந்தது. பிறகு கணவரின் காரியங்களைத் தம் காரியமாகவும் அவர் கொண்டு ஒத்துழைக்கலானார். அன்னையாரும் பல முறை சிறைபுகுந்தார். |
|
இந்திய சுதந்திரம் பெறும்வரை சபர்மதி ஆச்ரமத்துக்குத் திரும்புவதில்லை என்று காந்திசபதம் பூண்டார். அதனால் 1933 செப்டம்பரில் அவர் ஆச்ரமத்தை வர்தாவுக்கு மாற்றினார். ஹரிஜன சேவைக்காக அங்கிருந்து நவம்பரில் யாத்திரை புறப்பட்டார். பத்துமாத காலத்தில் ஒவ்வோரு மாகாணத்துக்கும் விஜயம் செய்தார். |
|
1934 ஜனவரியில் பூகம்பத்தினால் பீஹாரில் பிரளய நாசம் ஏற்பட்டது. தென்னாட்டிலிருந்த காந்தி உடனே பீஹாருக்கு விரைந்தோடினார். ஒவ்வொரு கிராமத்துக்கும் கால் நடையாகச் சென்று மக்களின் கண்ணீரைத் துடைத்தார். "இந்த நாசம் உங்களுக்கு எதைப் போதிக்கிறது? ஹிந்து - முஸ்லிம், தீண்டாதார், உயர்ந்தோர் என்ற பேதங்கள் கிடையாது என்பதையே போதிக்கிறது. உழையுங்கள், உழையுங்கள், உழையுங்கள். யாசகம் எடுக்காமல் உழையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். நிவாரண வேலைகளைக் கவனித்து வந்த ராஜேந்திர பிரஸாத்துக்குக் காந்தி பேருதவி புரிந்தார். |
|
1934 அக்டோபரில் பம்பாய் காங்கிரஸ் நடந்தபோது காந்தியின் தலைமையில் அகில இந்திய கிராமக் கைத்தொழில்கள் சங்கம் ஒன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டது. "சத்திய, அஹிம்சை" மார்க்கத்தைக் கோட்பாடாகக் கொள்ளக் காங்கிரஸ் மறுத்ததால், காங்கிரஸின் நான்கணா உறுப்பினர் பதவியைக்கூடக் காந்தி துறந்துவிட்டு, நிர்மாண வேலைகளில் ஒரு முகமாய் முனைந்தார்.
1935 மே மாதம் காந்தியும் கஸ்தூரிபாயும் பார்ஸாத் கிராமத்துக்கு விஜயம் செய்தனர். பிளேக் கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டிருந்த அப்பகுதியில் சர்தார் பட்டேல் நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்தார். கொள்ளை நோயைத் தீரமுடன் எதிர்க்கவேண்டும் என்றும், எல்லோரும் தோட்டி வேலை செய்யவேண்டூம் என்றும் காந்தி போதித்தார். எலிகளையும் ஈக்களையும் அடியோடு ஒழிப்பபதற்காக இவர் தெரிவித்த நிரந்தரப் பரிகாரங்களைச் சிலர் கடுமையாகக் கண்டித்தனர். ஆனால் சர்தார் பட்டேல் அவரது உறுதுணைவராக நின்று செயலாற்றினார். |
|
கிராமங்களின் கஷ்டங்களை நேரில் கண்டறிவதற்காக, சேகான் (சேவா கிராமம்) என்ற கிராமத்தை காந்தி தம் ஆராய்ச்சிக் கூடமாகத் தேர்ந்தேடுத்தார். வர்தாவிலிருந்து நான்கு மையிலில் உள்ள அக்கிராமத்துக்கு 1936 ஏப்ரல் 30உ அவர் கால்நடையாகப் போய்ச் சேர்ந்தார். பல குடிசைகளும், ஆஸ்பத்திரியும், பால் பண்ணையும் அங்குத் தோன்றி ஒரு அச்ரமம் உறுவாயிற்று. ஆச்ரமக் குடிசைகளில் காந்தியின் குடிலே சின்னஞ்சிறியது, ஆனால் மிகச் சுத்தமானது. இதன் வெளிச்சுவரைக் களிமண்ணால் ஆன சர்க்காவின் புடைப்பு உருவம் அலங்கரித்தது. சேவா கிராமத்தின் கீர்த்தி உலகெங்கம் பரவியது. நாட்டின் கதியை நிர்ணயித்த பல முக்கிய முடிவுகள் அங்கு வகுக்கப்பட்டன. வெளி நாட்டார் உட்பட பிரமுகர்கள் எல்லாம் அக் குடிலில்தான் காந்தியைப் பேட்டி கண்டனர்.
காந்தியின் அன்றாட அனுஷ்டானங்கள் கண்டிப்பானவை. காலை 5 மணிக்கு முன்னாலேயே கண்விழித்து விடுவார். 6 மணி முதல், கடிதப் போக்குவரத்துக்களிலும், "ஹரிஜன்" பத்திரிகைக்குக் கட்டுரைகள் வரைவதிலும் முனைவார். காலை 5 மணிக்கு முதல் பானம், மாலை 5 மணிக்குக் கடைசி ஆகாரம். காலை மாலைகளில் உலாவச் செல்லும்போது நண்பர்களுடனும் விருந்தாளிகளுடனும் பேச வேண்டியவைகளைப் பேசித் தீர்த்துவிடுவார். மத்தியானவேளையில் நூற்பார். கஸ்தூரிபாயும் நூற்பதில் தவறுவதில்லை. சமையலறை, வயல், வர்தாவில் உள்ள தோல் ஆலை முதலியவற்றின் சில்லறை விஷயங்களைக்கூடக் காந்தி சிரத்தையுடன் கவனிப்பார். நோய்வாய்ப்படும் ஆச்ரமவாசிகளையும், கால்நடைப் பண்ணையையும் அவர் தினந்தோறும் பார்வையிடுவார். புத்திளங் கன்றுகளைப் பிறந்தவுடன் பார்க்கப் போய்விடுவார். தினந்தோறும் இருமுறை பிரார்த்தனை நடத்தக் காந்தி மறந்ததே இலை.
|
|
|
|
| |
Website
Designed by Gandhi Iyakkam, Thanjavur |
|