கல்கத்தா மார்க்கமாக நவகாளிக்குச் செல்லவேண்டும் என்று அக்டோபர் மாதத்தில் காந்தி தீர்மானித்தார். தேக பலவீனத்தையும் பிரயாணக் கஷ்டத்தையும் நிலைமையின் சிக்கலையும் அவர் பொருட்படுத்தவில்லை. "இருள் சூழ்ந்த இரவு, வீட்டிலிருந்து வெகு தூரம் வந்து விட்டேன்; கடவுளே நீர்தான் வழிகாட்ட வேண்டும்' என்ற (ஆங்கில) பாசுரத்தை முழு உண்மையுடன் நான் இப்போது பாட முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் மாதத்தில் நவகாளிக்குக் காந்தி போய்ச் சேர்ந்தார். கஷ்டநஷ்டம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி தைரியம் ஊட்டுவதற்காக அவர் கால்நடையாக, கிராமம் கிராமமாக யாத்திரை சென்றார். சென்ற இடம் எல்லாம், பயங்கர நாசக் காட்சிகளைக் கண்டார். அவர் நெஞ்சம் நெக்கு நெக்காய் உருகியது. கிராமவாசிகளின் மண் குடில்களில் தங்கினார். ஒறறையடிப் பாதைகளிலும், வயல் வரப்புகளிலும், மூங்கில் பாலங்களிலும் அண்ணல் திருவடி நோக நடந்து சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஜனங்கள் அவரிடம் ஓடோடி வந்து தங்கள் சோகக் கதைகளைச் சொல்லிப் புலம்பினர்.
77 வயதுக் கிழவரான காந்தி, நவகாளியில் தினசரி 18 மணி நேரம் வேலை செய்தார். அதிகாலையில் 4 மணிக்கு, சில தினங்களில் 2 மணிக்குக் கூட, அவர் எழுந்துவிடுவார். கடிதங்களுக்குப் பதில் எழுதுவதை முதலில் கவனிப்பார். பிறகு பிரார்த்தனை நடத்துவார். சிரத்தை மிகுந்த மாணவனைப் போல் ஒவ்பொரு நாள் காலையிலும் வங்காளி பாஷையைக் கற்பார். ஏழைகளின் குடிசைகளுக்கும் அகதி முகாம்களுக்கும் நேரில் சென்று சாந்தி அளித்தார். மாசு படுத்தப்பட்ட சில ஆலயங்களில் அவர் மறுபடியும் விக்கிரகப் பிரதிஷ்டை நடத்தி வைத்தார். மக்களைப் பீடித்திருந்த அச்சம் மறைந்தது; துன்ப இருள் விலக ஆரம்பித்தது. ஜனங்கள் அழுது புலம்புவதற்குப் பதில் காந்தியுடன் நாம சங்கீர்த்தனம் பாட ஆரம்பித்தனர்.
காந்தி தமக்குப் பிரியமான 'ராம்துன்' பஜனாவளியில் புதிதாக இரு அடிகளைச் சேர்த்துக கொண்டார். "ஈஸ்வர், அல்லா, தேரே நாம்; சப்போ ஸன்மதி தே பகவான்" என்பவையே அந்தப் புதிய, பொருத்தமான அடிகள் (ஈஸ்வரன், அல்லா என்பவை எல்லாம் உமது நாமங்களே; பகவானே எங்கள் அனைவருக்கும் நல்புத்தியை அருளும் - என்பது அவற்றின் பொருள்.) |