மகாத்மா காந்தி வரலாற்றுக் குறிப்புகள்
அரிய படங்களுடன்...
முன்னுரை
(சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி)

உலகத்தில் பலர் பல பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் காந்தி மகானைப் போல், அவர் செய்த அளவில், தனக்கென்று அல்லாமல் பிறருடைய நன்மைக்கான காரியங்களை ஆராய்ந்து தீர்மானித்து, அவற்றைத் தருமத்துக்கு மாறான முறைகளைக் கையாளாமல் அற வழியிலேயே நிறைவேற்றியவர் இந்த யுகத்தில் வேறு யாரும் இல்லை.

காந்தி மகான் ஜனித்த காலத்தில், நமது நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்கம் வேரூன்றிப் போயிருந்தது. காரணம், 1857ஆம் ஆண்டில் சிப்பாய் கலகமாக மூண்ட கிளர்ச்சி வெற்றி பெறவில்லை. அதுவரையில் இந்தியாவில் பிரிட்டிஷாரின் போக்கானது, குறியொன்றும் இல்லாத நடவடிக்கையாக இருந்தது. அது, இந்தச் சிப்பாய்க் கலகத்தின் விளைவாகத் திட்டவட்டமான ஒரு ராஜ்ய ஆதிக்கமாக உருவெடுத்து விட்டது. கூடவே, அந்நிய ஆக்கிரமிப்பைக் கண்டு மக்களின் உள்ளம் கொதிப்படைவதற்குப் பதிலாக, ஆங்கிலேயரைக் குரு ஸ்தானத்தில் வைத்து மதித்துப் போற்றி, அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்ல முயலும் ஆங்கிலம் படித்த கூட்டம் ஒன்று நாட்டில் முளைத்து வளர்ந்தது. ராஜீயத் துறையில் அடிமைப்பட்டு போனதுடன், நாட்டின் பண்பாடும் அறிவுமே அந்நியர் வசம் ஆகிவிட்டன. ஆகவே, பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்தியாவில் சாசுவதமாக நிலைபெற்றுப் போவதற்கு வகை ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் காந்திஜி தோன்றினார்.

அவர் வாழ்க்கை முடிந்துபோய், இந்திய சமூகம் துயரத்தில் ஆழ்ந்தபோது, இந்தியா முழுச் சுதந்திரப் பதவிபெற்ற ஒரு நாடாகியிருந்ததை நாம் கண்டோம். அவருடைய ஆயுள் காலத்திற்குள் உரிமை இழந்திருந்த மக்கள் சமூகம் பூரண சுதந்திரம் பெற்றது. வாயில்லாப் பூச்சிகளாக உழன்ற சமூகம் குரல் பெற்றது. ஆயுதமற்ற மக்கள் சுதந்திரப் போரில் வெற்றி அடைந்து, உலகத்துக்கே பயன்படுமாறு ஒரு புது சக்தியைத் தோற்றுவித்துக் காட்டினார். இந்தப் புதிய சக்தியின் அதிசய வரலாறே காந்தியின் வாழ்க்கை வரலாறும் ஆகும். ஆயுதம் ஏதும் இன்றி வெற்றியடையும் ஆன்ம சக்தியை உண்டாக்கி நிரூபித்தார்.

அவர் காலத்திற்கு முன் ராஜீயத் துறையிலும், சமயத் துறைகளிலும் தோன்றியிருந்த உணர்ச்சிகளிலும் இயக்கங்களிலும், அரசியல் சுதந்திரப் போருக்கு வேண்டிய சக்தியைக் காந்தி தம் அருட்பிரசாத மேதையினால் திரட்டி ஒருமுகப்படுத்தினார். அணையாத சுதந்திர ஆக்ரகம் கொண்ட ஒரு அணிவகுப்பைத் தோற்றுவித்தார். பல காங்கிரஸ் தலைவர்களுடைய சேவைகளை அஸ்திவாரமாகக் கொண்டே, காந்திமகான் சுதந்திர இயக்கத்தை நடத்தினார் என்பது உண்மையாயினும், அவருடைய தனிச் சிறப்பு என்னவென்றால் பாரத சுதந்திரப் புரட்சி தீவிர வேகத்துடன், ஆனால் ஆயுத பலமே இன்றித் தார்மிக முறையில் நடந்தது அவராலேதான். அவர் கையாண்ட தார்மிக முறையின் விசேஷத்தினால் இந்தியாவுக்கு அவர் செய்த பணி உலக மக்கட் பணியாகிவிட்டது. குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கோ சமயத்திற்கோ, மக்கள் இனத்திற்கோ மட்டும் உரியதாக நின்று விடவில்லை அவருடைய சேவை. அவர் உழைத்தது இந்தியாவில், இந்திய மக்களிடையே யாயினும், மக்கள் உலகம் முழுவதையுமே நோக்கிப் பணி செய்தார். அவர் பயனும் உலகம் முழுவதற்குமே பரவிற்று.

ஐயமற்ற தெய்வ பக்தியுடன் காந்திஜி தமது வாழ்க்கையை நடத்தினார். புதிய சமய சித்தாந்தம் எதையும் நிறுவி, பூசல்கள் விளைக்கவில்லை. கடவுளின் எண்ணற்ற கல்யாண குணங்களில் சத்தியத்தை அவர் வற்புறுத்தினார். சத்திய ரூபமான தெய்வத்தைக் காண்பதற்கு மார்க்கமும் காட்டினார். அது உண்மை, தளராத ஆர்வம், அன்பு, எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமை என்று காட்டி நிரூபித்தார்.

அவருடைய வாழ்க்கை மனித இனம் முழுவதற்கும் இன்னொரு பாடத்தையும் கற்பிக்கிறது; இளம்பிராயத்தில், எந்த அசாதாரண அற்புத சக்தியும் அவரிடம் காணப்படவில்லை. பின்னால் அவரிடம் நாம் கண்ட வைரம் பாய்ந்த சித்தமும் தீவிர அறவுணர்வும், அவருமடய உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அது இளம்பிராயத்தில் வெளிப்படவில்லை. ஆகவே, யாரும் சத்திய முயற்சியினால் தம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கு அவர் வாழ்க்கையிலிருந்து நம்பிக்கையும் ஊக்கமும் பெறலாம். அவரிடம் முக்கியமாக இருந்தது நன்மை எது, தீமை எது என்று பகுத்துக் காணும் ஐயந்திரிபற்ற உணர்வு; அதன்மேல், அதை ஒட்டிய தளரா முயற்சி.

இம் முயற்சியில், எந்தச் சாதாரண மனிதனும் செய்யக்கூடிய வகையில், படிப்படியாக அடியெடுத்து வைத்தே அவர் நடந்துசென்றார். கடைசியில், இம்முயற்சியின் வெற்றிச் சிகரத்தில் அவர் நின்றபோது, மனித சாதனையைக் கடந்து நிற்கும் தனிப் பிறவியாகவும் தோற்றம் அளித்தார். "இத்தகைய ஒரு மகான், நம்பைப் போலவே ஊனும் குருதியுமான மனிதன் ஒருவன், இந்த அற்புத சாதனையோடு, இம்மண்ணிலே வாழ்ந்தான் என்பதை வருங்கால மக்கள் நம்பத் தயங்குவார்கள்" என்றார் ஒரு மேனாட்டுப் புகழ்பெற்ற பெரியார்.

ஆயினும் சாதாரண மனிதன் இவ்வளவையும் செய்தான் என்பதைக் கண்டோமல்லவா? இதனால் உண்டாகும் நம்பிக்கையும் ஊக்கமும் பாமர மக்களுக்கு மதிப்பற்ற ஒரு செல்வமாகும்.

1921ஆம் அண்டு வரையில் தமது சுயசரிதத்தை இம்மியளவும் உண்மைக்கு மாறுபடாதபடி அவரே எழுதி வைத்திருக்கிறார். அறமும் அறிவும் ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வாறு மலர்கிறது என்பதை இந்தச் சுய சரித்திரத்தில் கண்டு உணரலாம்.

உலகத்துக்குப் பணி செய்த காந்தி மகான் நம்முடைய நாட்டில் பிறந்தவர் என்று நாம் அனைவரும் பெருமை கொண்டாடலாம். என்னுடைய இனத்தைச் சேர்ந்தவர் அவர் என்று சொல்லிக் கொள்ளும் உரிமை பாரத நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.

எந்த விஷயத்தில் உண்மையைக் காண வேண்டுமானாலும், ஆராயாமலே முன் கூட்டி ஒரு அபிப்பிராயத்தை மனத்தில் பதிய வைத்துக் கொண்டு சிக்கல் படுத்திக் கொள்ளலாமல், பளிங்கு போன்ற சுத்த மேதையை வைத்து விஷயங்களைச் சோதித்து உண்மையை நாடுவார் அவர். திரைகளும் தடங்கல்களும் உண்டாக்கிக் கொள்ளாமல் உண்மையைக் கண்டபின் அந்த உண்மையை ஒட்டி, காரியாம்சத்தில் என்ன செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார். தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத் தடைகளும் தடங்கல்களும் பல இருக்கும். அவற்றைத் தாண்டுவதில் துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படும். அதற்காகப் பயப்படாமல் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வதே வெற்றிக்கு வழி என்று உணர்ந்து, மகிழ்ச்சியுடன் துன்பத்தில் இன்பமும் வெற்றியும் காண்பார். இந்த முறையைப் பிறருக்கும் உபதேசித்தார். முறையில் வெற்றி நிச்சயம் என்பதையும் நிரூபித்தார்.

மொழி பேதங்களையும் மத பேதங்களையும் கண்டு கவலைப்பட்டுப் பயந்து பாரத நாட்டுக்கு உய்வில்லை என்று கருதி வந்தோம். பேதங்களைக் கண்டு கலங்க வேண்டியதில்லை, எல்லா மொழிகளுக்கும் எல்லாச் சமயங்களுக்கும் சம கௌரவம் உண்டு, பிற மொழியை மதித்தே தன்னுடைய மொழிக்குப் பக்தி செலுத்தலாம், சமயங்கள் எல்லாம் ஒரே தெய்வத்தை அடையும் வழிகளாகும், மற்ற மார்க்கங்களும் நாம் வழிபடும் தெய்வத்தினிடமே போய்ச் சேரும் என்ற மகத்தான உண்மையைப் போதித்து, தம் வாழ்க்கையில் அந்த விசாலமான கருத்தையே செலுத்தி வாழ்ந்து காட்டினார். அதன் பயனாகப் பாரத நாடு விடுதலை பெற்றது.

ஒரு மதத்தில் பிறந்து வாழ்ந்து பழக்கப்பட்டவர், வேறு மதத்தில் சேருவதும் அப்படிச் சேர்க்கப் பிறர் விரும்புவதும் மடமை, தருமத்துக்குக் குந்தகமாகும், அவனவன் தன்தன் மதத்தில் தரும வாழ்க்கை நடத்தும்படி நாம் உதவ வேண்டுமே அல்லாமல், அவனை அவனுடைய குடும்பத்தினின்றும் உறவினர்களிடமிருந்தும் பிரித்துக் குழப்பம் உண்டாக்கலாகாது என்று போதித்துப் பிரசாரம் செய்து, மத மாற்றுதலில் தீவிர வேலை செய்து வந்தவர்களுக்கு நற்புத்தி புகட்டினார். வெற்றிகரமாகவே இதைச் சாதித்தார். மதமாற்றப் பிரசாரங்கள் அவர் காலத்துக்குப் பிறகு மிகவும் குறைந்து போயின. தேசத்தில் சாந்தி ஏற்பட்டது.

'நான் சீர்திருத்தக்காரன். ஆனால் எந்த ஒரு நவீன சம்பிரதாயத்தையும் தோற்றுவிக்க நான் விரும்பவில்லை' என்று விளக்கமாகவும் ஊர்ஜிதமாகவும் கூறி வந்தார். ஹிந்து சம்பிரதாயம் மிக விசாலமானது; அதில் நாம் எல்லாத் திருத்தங்களையும் செய்துகொண்டு சுகமாக இருக்கலாம்; அதற்காகப் புது மார்க்கமாவது மதமாவது சம்பிரதாயமாவது நாம் உண்டாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என்று ஆயுள் முழுவதும் தம்முடைய சமய விளக்கத்தைச் செய்து வந்தார். மற்றச் சீர்திருத்தக் காரர்களுக்கும் காந்தி மகானுக்கும் இது ஒரு பெரிய வித்தியாசம். ஆயினும் 'காந்தீயம்' என்று ஒரு சொல் பிரயோகத்தில் வந்துவிட்டது. அந்தச் சொல்லின் பொருள் மேற்கண்டதைத் தவிர வேறல்ல. அன்பும் சத்தியமும் அகிம்சையும் ஹிந்து மதத்துக்குப் புதிதல்ல. இவற்றுக்குக் காந்தி மகான் அடிகோடு இட்டு அழுத்தம் கொடுத்தார். அதைத்தான் காந்தீயம் என்று சொல்லி வருகிறார்கள். 'காந்தீயம்' என்பது ஒரு புதிய சம்பிரதாயம் அல்ல. "செய்யவேண்டிய காரியங்களைச் செய்; பசை கொள்ளாமல் செய். இதுவே சந்யாசம்" என்பது கண்ணன் போதித்த சாஸ்திரம். காந்திமகான் உபதேசித்த காந்தீயமும் இதுவே. இதை சாஸ்திரம் படித்தோர் கர்மயோகம் என்பார்கள். ஆயினும் காந்திஜியினுடைய மார்க்கம் பக்தி மார்க்கமே. தான் அடைந்த ஞானத்தையும் பயின்ற யோகத்தையும் தன்னடைய சக்தியையுமே நம்பிச் சரணாகதி முறையை விட்டாரில்லை. அனைத்தும் உன்னுடையது என்று ஆண்டவனுக்குப் பணியையும் தன்னையும் அர்ப்பணம் செய்வதே பக்தி மார்க்கம். இதைத்தான் காந்திமகான் தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் போதித்தார்.

தம்முடைய உபதேசங்களிலும் தம் செய்கைகளில் காட்டிய நிதரிசனத்திலும், அறம் வேறு உலக வியவகாரம் வேறு என்கிற மோசமான லோகாயதக் கருத்தை அகற்றித் தள்ளினார். அரசியல், தொழில், வியாபாரம் எல்லாமே தருமத்தோடு கலந்த விஷயங்கள்; அனைத்துக்கும் தருமத்தை உரை கல்லாக வைத்துக் கொள்ள வேண்டும்.; கடவுள் பக்தியைப் பூஜைப் பண்டமாகத் தனித்து வைத்து அரசியல், வியாபாரம், தினசரி வாழ்க்கை இவைகளை லோகாயத முறையில் நடத்துவதில் பயனில்லை - இந்த உண்மை முன்னோர் சொன்னதே யாயினும், வழங்கி வந்த பொய்க் கருத்தைக் காந்தி மகான் ஐயமறக் கண்டித்துப் பொருளும் இன்பமும் அறத்தோடே கலந்ததாக இருக்கவேண்டும் என்பதை வற்புறுத்திப் போதித்தார். ஓரளவு ஜனங்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்.

இதனுடன் இன்னொரு பழம் பொய்யையும் பொய்யென்று விளக்கி அகற்றினார். நல்லதென்று கருதிய ஒரு பயனை அடைவதற்காக அறம் வழுவிய முறைகளையும் கையாளலாம், குற்றமில்லை என்று உபதேசிக்கப்பட்டு வந்த கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று விளக்கினார். முறை வேறு, பயன் வேறு அல்ல; இரண்டுமே தருமத்துக்கு விருத்தமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு காரியமும் அறமா, அறம் வழுவியதா என்று விவேகத்துடன் பகுத்தறிந்து அறம் வழுவாத முறைகளையே கையாள வேண்டும். பயன் மட்டும் நல்லதாக வைத்துக் கொண்டு அதை அடைவதற்காக நாம் உபபோகப்படுத்தும் கரணங்களும் செய்யும் செயல்களும் எவ்வகையாயும் இருக்கலாம் என்று வெகு நாளாக ஒரு தவறாக கொள்கையைப் பலர் அங்கீகரித்து வந்தார்கள். இது முற்றிலும் தவறு என்பதைக் காந்திஜி வற்புறுத்திச் சித்தாந்தம் செய்தார்.

அரசியல் துறையில் மகத்தான ஒரு புது நிலைமையை உலகத்துக்கே உண்டாக்கி நிலை பெறச் செய்துவிட்டார். எந்த ஜன சமூகத்தையும் அன்னிய நாட்டார் அடக்கி ஆள முடியாத நிலைமையை உண்டாக்கிவிட்டார். பாரத நாட்டில் மட்டிலுமல்ல, பாரத நாட்டில் நடந்த புரட்சியின் பலனாக உலகத்தில் எந்த ஜன சமுதாயத்தையும் அன்னியர் வந்து இனி அடக்கி ஆள முயற்சி செய்வதில் பயனில்லை என்று வல்லரசுகள் அனைத்தும் உணரும்படியான நிலைமையை ஏற்படுத்திவிட்டார். அடக்கி ஆளப்பட்ட பிரதேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விடுதலை அடைந்து வருகின்றன. அடக்கி ஆண்ட அன்னியர்கள் இனி வேண்டாம் என்று சந்தோஷமாகவே திரும்பிப் போகும் முறை ஏற்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் காரணம்; எந்த ஜன சமூகமும் தன் சம்மதத்தைக் கொடுத்துத்தான் உண்மையில் அன்னிய ஆட்சிக்கு உட்பட்டு வருகிறது. சம்மதத்தை மறுத்துவிட்டால் அன்னிய ஆட்சி முடியாத காரியம். சம்மதத்தை மறுப்பதற்கு ஆயுதங்கள் வேண்டியதில்லை. இணங்காமல் இருப்பதே மறுப்பாகும். ஆனால் அப்படி மறுப்பதில் துன்பங்களைத் தாங்க வேண்டியது அவசியமாகும். துன்பத்தை தாங்கும் சக்தியும் பொறுமையும் திரட்டிக் கொள்ள வேண்டும். அடிமை நிலையைத் தீர்க்கும் யுத்தம் இதுவே. இந்த யுத்தத்தில் ஏற்படும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பொறுத்துக் கொள்வதே வெற்றிக்கு வழி. கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்ட ஒவ்வொரு கட்டமும் மலையேறுவதற்கு ஒரு படியாகும். ஏறின ஒவ்வொரு படியும் சிரமம் தந்ததாயினும் கொடுமுடியை நெருங்ககினோமே என்கிற இன்பத்துடன் நம்புக்கையும் தரும். இந்தியாவில் இதை நிரூபித்தாய்விட்டது. மற்ற நாடுகளில் இந்த உண்மையை ஆளப்பட்டவர்களும் ஆளும் அன்னிய சர்க்காரும் இரு பட்சத்தாருமே உணர்ந்து கொண்டு யுத்தம் இல்லாமலே சுதந்திர நிலைமை தோன்றி வருகிறது. இனி, ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரை ஆள முடியாது என்கிற நியதி ஊர்ஜிதமாய்விட்டது. உலக சரித்திரத்தில் இது ஒரு புதிய அத்தியாயம். புது யுகதர்மம் என்றே சொல்லலாம் இந்த அத்தியாத்துக்குக் காரணகர்த்தா நம்முடைய காந்தியாவார். காந்தி மகானை எதிர்த்த பிரிட்டிஷாரும் இந்தப் புது அத்தியாயத்துக்கு, வேறு ஒரு பொருளில், காரணகர்த்தா ஆவார்கள். உலகத்துக்கு அவர்களும் சரியான வழியைக் காட்டிவிட்டார்கள் அல்லவா?

ஒரு அவதார புருஷன் வந்து நாம் அழிந்து போகாமல் கைகொடுத்துத் தூக்கினான். பாதாளத்தில் அழுந்திய பூமியை மகாவிஷ்ணு வராகனாக வந்து தோண்டித் தூக்கி நிறுத்தினதைப் போல் என்றால் மிகையாகாது. ஆனால் அந்த அவதார புருஷன் உபதேசித்த உண்மைகளை மறந்தோ அல்லது கட்டிவைத்துப் புறக்கணித்தோ நடந்தோமானால், அடைந்த சுதந்திரம் பொருளும் சுகமுமற்ற பிருடைச் சுரையாகப் போகும்.

வ.எண்.
பொருள்
1
பதிப்புரை: பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
2
முகவுரை
3
முன்னுரை
4
அரிய படங்களுடன் மகாத்மாவின் வரலாற்று குறிப்புகள்
5
படங்கள் தொகுப்பு

6

நன்றி அறிவிப்பு

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur